
உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் உச்சத்தை எட்டியுள்ளது. அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 8 லீக் போட்டிகளிலும் தொடர்ச்சியாக 8 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிச் சுற்றுக்கும் முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.
அதிலும் வலுவான ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து போன்ற டாப் அணிகளை தோற்கடித்த இந்தியா மிகப்பெரிய சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட தென் ஆப்பிரிக்காவையும் 83 ரன்களுக்கு சுருட்டி மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் பேட்டிங் துறையில் ரோஹித் சர்மா, விராட் கோலி, கில், ராகுல், ஸ்ரேயாஸ் உட்பட அனைவருமே மிகச்சிறப்பாக செயல்பட்டு நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள்
அவர்களுக்கு நிகராக பும்ரா, சிராஜ் மற்றும் ஷமி எதிரணிகளை அசால்டாக ஆல் அவுட் செய்து பெரிய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகின்றனர். அதே போல ஜடேஜா மற்றும் குல்தீப் ஆகியோர் சுழலில் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்து வருவதால் 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லமால் நிற்க மாட்டோம் என்ற வகையில் இந்தியா மிரட்டி வருகிறது என்றே சொல்லலாம்.