பாபர் அசாம், விராட் கோலியை ஒப்பிடுவது முட்டாள்தனமானது - அப்துல் ரஸாக்!
பாபர் அசாம், விராட் கோலி இருவரையும் ஒப்பிட்டு பேசுவது முற்றிலுமாக முட்டாள்தனம் என கருத்து தெரிவித்துவிட்டு, யார் சிறந்தவர் என்று பேசியுள்ளார் அப்துல் ரசாக்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் மைதானத்தில் எந்த அளவிற்கு கடும்போட்டி நிலவுமோ, அதே அளவிற்கு சமூக வலைதளங்களில் நிலவும். குறிப்பாக, இரு அணிகளின் தலைசிறந்த வீரர்களின் ரசிகர்கள் மத்தியிலும் கடும் விவாதம் நிலவும். அந்த வகையில் சமகாலத்தில் தலைசிறந்த பேட்ஸ்மென்களில் ஒருவராக திகழ்ந்துவரும் விராட் கோலி, கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கருக்கு நிகராக ஒப்பிட்டு பேசப்பட்டு வருகிறார். அதற்கேற்றவாறு பல்வேறு சாதனைகளையும் படைத்து, முறியடித்து வருகிறார்.
பாகிஸ்தான் அணியில் சமகாலத்தில் தலைசிறந்த வீரராக பார்க்கப்பட்டு வரும் பாபர் அசாம், சிறப்பான பேட்டிங் மூலம் பல சாதனைகளை படைத்து வருகிறார். மூன்றுவித போட்டிகளிலும் நம்பர் ஒன் வீரராகவும் உயர்ந்திருக்கிறார். இவரை விராட் கோலியுடன் ஒப்பிட்டு பாகிஸ்தான் ரசிகர்கள் பேசி வருகின்றனர். ஆனால் இந்திய ரசிகர்களோ, இருவரையும் எப்படி ஒப்பிட முடியும்? விராட் கோலி எங்கேயோ இருக்கிறார்! பல வருடங்களாக தொடர்ந்து சாதனை படைத்து வருகிறார். பாபர் அசாம் இப்போது வந்தவர், ஓரிரு சாதனைகள் தவிர அப்படி என்ன செய்து விட்டார்? என்றும் கேள்விகளை எழுப்புகின்றனர்.
Trending
இந்த விவாதம் முன்னாள் வீரர்கள் வரை சென்றுள்ளது. அவர்களும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக், யார் சிறந்தவர்? என்பதற்கு கருத்து தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து பேசிய அவர், “விராட் கோலி மிகச்சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் சிறந்த கேப்டன். அணியை தனி ஆளாக எடுத்துச் சென்றுள்ளார். அவரை போன்றே, உறுதியான மனநிலையை அணி வீரர்களுக்கு மத்தியிலும் கடத்துவார். மேலும் மிகச்சிறந்த உடல் தகுதியையும் கொண்டவர் விராட் கோலி. அவரின் உடல்தகுதிக்கு ஈடு இணையே கிடையாது. இன்னும் பல வருடங்கள் அவரால் கிரிக்கெட் விளையாட முடியும்.
அதேபோல் பாகிஸ்தான் அணியிலும் சிறந்த பேட்ஸ்மேன் பாபர் அசாம். அவரது கேப்டன் பொறுப்பில் எனக்கு விமர்சனங்கள் உண்டு. ஆனால் சிறந்த பேட்ஸ்மேன். இருவருமே அவர்களது அணிக்கு சிறந்தவர்கள். இருவரையும் ஒப்பிட்டு பேசுவது முட்டாள்தனம். கடந்த காலத்தில் கப்பில் தேவ் மற்றும் இம்ரான் கான் இருவரையும் ஒப்பிட்டு பேசுவது எப்படி சரியாக இருக்கதோ, அதேபோல் இந்த ஒப்பீடும் சரியாக இராது.
ஏனெனில் அவர்களது அணியில் அவரவர் சிறந்தவர். இவர்களை எப்படி ஒப்பீடு செய்யமுடியும்?. என்னை பொருத்தவரை, விராட் கோலி, சிறந்த கிரிக்கெட் வீரருக்கு தகுந்த உடல்தகுதியை வைத்திருக்கிறார். பாபர் அசாம் இவரிடமிருந்து சில குணங்களை கற்றுக் கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now