
ஆஸ்திரேலிய அணியானது அடுத்த வாரம் தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதையடுத்து வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக அணியில் இடம்பிடிக்காமல் இருந்த மிட்செல் மார்ஷ் மீண்டும் டி20 அணிக்கு திரும்பியுள்ளார்.
மேலும் இந்த அணியின் கேப்டனாகவும் மிட்செல் மார்ஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதவிர்த்து பிபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அதிரடி பேட்டர் மிட்செல் ஓவன் மற்றும் சுழற்பந்துவீச்சாளர் மேத்யூ குன்னமேன் ஆகியோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் காயத்திலிருந்து மீண்டுள்ள கேமரூன் க்ரீன், வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் கூப்பர் கனொலிஆகியோருக்கும் ஆஸ்திரேலிய டி20 அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.