
கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் உலக கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. மும்பை வான்கடேவில் நடந்த இறுதிப்போட்டியில் இலங்கைக்கு எதிராக தோனி சிக்ஸர் அடித்து போட்டியை முடித்து கோப்பையை வென்ற தருணத்தை கிரிக்கெட் ரசிகர்கள் என்றைக்குமே மறக்கமாட்டார்கள்.
மும்பை வான்கடேவில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 274 ரன்கள் குவித்தது. 275 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் சேவாக் ரன் ஏதும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே நடையை கட்ட, சச்சினும் 18 ரன்களில் வெளியேற, இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதன்பிறகு, காம்பீர் - கோலி இணை பொறுப்பாக ஆடி மூன்றாவது விக்கெட்டிற்கு ஓரளவு ரன்களை குவித்தது. பிறகு காம்பீர் மற்றும் தோனியின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டியில் முக்கியமான இன்னிங்ஸை ஆடிய கம்பீர் 97 ரன்களில் ஆட்டமிழக்க, தோனி கடைசிவரை ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெற செய்தார்.