
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடந்த 2018ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய போது கேப்டவுனில் நடந்த டெஸ்டில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கியது. பந்து 'ஸ்விங்' ஆவதற்காக ஆஸ்திரேலிய வீரர் பான் கிராப்ட் உப்புதாள் கொண்டு பந்தை தேய்த்ததும், அதற்கு கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சஸ்மித், வார்னருக்கு ஓராண்டும், பான்கிராப்ட்டுக்கு 9 மாதமும் தடை விதிக்கப்பட்டது. கேப்டன் பதவியையும் ஸ்மித் இழந்தார். அவருக்கு பதிலாக டிம் பெய்ன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன்பின் ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்த 4ஆவது டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி 492 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் படுதோல்வி அடைந்தது.
அதன்பின் கடந்த 2021ஆம் ஆண்டு வரை கேப்டனாக பணியாற்றிய டிம் பெய்ன், பெண் ஊழியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய பிரச்சினையில் கேப்டன் பதவியில் இருந்து ஒதுங்கினார். இந்த நிலையில் 4 ஆண்டுக்கு முன்பு நடந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் மட்டுமல்ல, தென்ஆப்பிரிக்க அணியினரும் பந்தை சேதப்படுத்தும் யுக்தியை கையாண்டதாக டிம் பெய்ன் பரபரப்பான குற்றச்சாட்டை இப்போது கிளறியுள்ளார்.