
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியானது இன்னிங்ஸ் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இதையடுத்து பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தானில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, பேட்டிங் செய்ய களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷஃபிக் மற்றும் சைம் அயூப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அப்துல்லா ஷஃபிக் 7 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஷான் மசூத் ரன்களைச் சேர்த்து அணியை முன்னிலைப் படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 ரன்களை மட்டுமே எடுத்த தனது விக்கெட்டை இழந்தார்.
இதனால் பாகிஸ்தான் அணி 19 ரன்களிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் சைம் அயூப்புடன் இணைந்த அறிமுக வீரர் காம்ரன் குலாம் நிதான ஆட்டத்தை வெளிபடுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினார். பின்னர் இருவரும் இணைந்த தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இப்போட்டியில் தொடர்ந்து பாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் தங்களது அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன், மூன்றாவது விக்கெட்டிற்கு 149 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.