
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியானது இன்னிங்ஸ் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இதையடுத்து பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தானில் தொடங்கி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணியானது காம்ரன் குலாம் மற்றும் சைம் அயூப் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 366 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக கம்ரான் குலாம் 118 ரன்களையும், சைம் அயூப் 77 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக ஜேக் லீச் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணியில் பென் டக்கெட் சதமடித்து அசத்திய நிலையில் மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்க தவறினர். இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை ஜேமி ஸ்மித் 12 ரன்களுடனும், பிரைடன் கார்ஸ் 2 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் ஜேமி ஸ்மித் 21 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து பிரைடன் கார்ஸ் 4 ரன்னிலும், மேத்யூஸ் பாட்ஸ் 6 ரன்னிலும், ஷோயப் பஷீர் 9 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.