PAK vs ENG, 3rd Test: பாகிஸ்தானை சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்து இங்கிலாந்து சாதனை!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது.
பாகிஸ்தானுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 17 வருடங்கள் கழித்து 3 போட்டியில் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து முதலிரண்டு போட்டிகளின் முடிவில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று 2 – 0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரைக் கைப்பற்றியுள்ளது. குறிப்பாக தார் ரோடு போல இருந்த ராவில்பிண்டி பிட்ச்சில் டி20 இன்னிங்ஸ் விளையாடி வெற்றி கண்ட அந்த அணி சுழலுக்கு சாதகமாக அமைந்த முல்தானிலும் அதிரடி வெற்றி பெற்றது.
மறுபுறம் ஆஸ் திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையிலேயே இங்கிலாந்திடம் அடி வாங்கி கோப்பையை கோட்டை விட்ட பாகிஸ்தான் சொந்த மண்ணிலும் மண்ணை கவ்வி கிண்டல்களையும் விமர்சனங்களையும் சந்தித்தது. அந்த நிலையில் இத்தொடரின் சம்பிரதாய கடைசி போட்டி டிசம்பர் 17ஆம் தேதியன்று கராச்சியில் தொடங்கியது. அதில் வென்று குறைந்தபட்சம் வைட்வாஷ் தோல்வியை தவிர்த்து சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் தலைநிமிர வேண்டிய கட்டாயத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 304 ரன்கள் மட்டுமே எடுத்தது.
Trending
இதில் ஷஃபிக் 8, ஷான் மசூத் 30, அசார் அலி 45, ஷாகீல் 23, முகமத் ரிஸ்வான் 19 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 78 ரன்களும் ஆகா சல்மான் 56 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜேக் லீச் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்துக்கு ஜாக் கிராவ்லி 0, பென் டன்கட் 26, ஜோ ரூட் 0, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 26 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள்.
ஆனால் ஒல்லி போப் 51 ரன்களும் ஹரி ப்ரூக் மீண்டும் சதமடித்து 111 ரன்களும் எடுக்க மார்க் வுட் 35, ஓலி ராபின்சன் 29 என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் முக்கிய ரன்களை எடுத்ததால் தப்பிய இங்கிலாந்து 354 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அப்ரார் அஹமத், நௌமன் அலி ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
அதை தொடர்ந்து 50 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்ஸில் களமிறங்கிய பாகிஸ்தான் அறிமுக போட்டியில் விளையாடும் இளம் ஸ்பின்னர் ரிஹன் அஹ்மதின் மாயாஜால சுழலில் சிக்கி 216 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 54 ரன்களும் ஷாகீல் 53 ரன்களும் எடுத்தனர். இறுதியில் 167 ரன்களை துரத்தும் இங்கிலாந்து 3ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 112 என்ற நல்ல நிலையில் இருந்தனர். இதனால் நான்காம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 55 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை இருந்தது.
இதையடுத்து இன்று தொடங்கிய 4ஆம் நாள் ஆட்டத்தில் பென் டன்கட் 50 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 10 ரன்களுடனும் ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில் அபாரமாக விளையாடிய இருவரும் இன்றைய நாளின் முதல் செஷனிலேயே இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்தது. மேலும் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்த முதல் அணி என்ற சாதனையையும் இங்கிலாந்து அணி படைத்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now