
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது. போதிய வெளிச்சமின்மை காரணகாம தாமதமாக தொடங்கிய இப்போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸை வென்று பேட்டிங் செய்வதாக அறிவித்து விண்டீஸை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் ஷான் மசூத் மற்றும் முகமது ஹுரைரா இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் அறிமுக வீரர் முகமது ஹுரைரா 6 ரன்களிலும், கேப்டன் ஷான் மசூத் 11 ரன்னிலு விக்கெட்டை இழக்க, அதன்பின் களமிறங்கிய நட்சத்திர வீரர்க்ள் பாபர் ஆசாம் 8 ரன்களுக்கும், காம்ரன் குலாம் 5 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த சௌத் ஷகீல் மற்றும் முகமது ரிஸ்வான் இணை அரைசதம் கடந்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார்.இதன்மூலம் பாகிஸ்தான் அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து 6 விக்கெட்டுகளை கைவசம் இருந்த நிலையில் பாகிஸ்தான் அணி இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.
அதன்படி சௌத் சகீல் 56 ரன்களுடனும், முகமது ரிஸ்வான் 51 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். இதில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சௌத் சகீல் 6 பவுண்டரிகளுடன் 86 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சல்மான் அலி ஆகா 2 ரன்னிலும், நௌமன் அலி ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். மறுபக்கம் முகமது ரிஸ்வான் 71 ரன்களை சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார்.