
வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது. காலையில் தொடங்க இருந்த இப்போட்டியானது போதிய வெளிச்சமின்மை காரணமாக டாஸ் நிகழ்வானது தாமதமானது.
இதனால் இப்போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையானது எடுக்கப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற டாஸ் நிகழ்வில் பாகிஸ்தான் அணி டாஸை வென்று பேட்டிங் செய்வதாக அறிவித்து விண்டீஸை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் ஷான் மசூத் மற்றும் முகமது ஹுரைரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அறிமுக வீரர் முகமது ஹுரைரா 6 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து அணியின் கேப்டன் ஷான் மசூத் 11 ரன்களைச் சேர்த்த கையோடு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் களமிறங்கிய நட்சத்திர வீரர்க்ள் பாபர் ஆசாம் 8 ரன்களுக்கும், காம்ரன் குலாம் 5 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 46 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த சௌத் சகீல் மற்றும் முகமது ரிஸ்வான் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், தேவையான சமயங்களில் பவுண்டரிகளையும் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன்மூலம் இருவரும் அரைசதம் கடந்து அசத்தியதுடன் அணியை சரிவிலிருந்து மீட்டனர்.