
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று தொடரின் ஆரம்பத்திலேயே 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 02ஆம் தேதி முதல் விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரவீந்திர ஜடேஜே, கேஎல் ராகுல் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களின் காயத்தின் தன்மை அதிகம் இருப்பதாக இங்கிலாந்து எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருவரும் விலகுவதாக நேற்றைய தினம் அறிவித்தர். மேலும் இருவரது காயம் குறித்தும் பிசிசிஐ மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதையடுத்து, அவர்களுக்கு மாற்று வீரர்களாக சர்ஃப்ராஸ் கான், சௌரவ் குமார் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த பல வருடங்களாக உள்ளூர் போட்டிகளில் அபாரமாக செயல்பட்டாலும், இந்திய அணியிலிருந்து தொடர்ந்து புறக்கணிப்பட்டு வந்த சர்ஃப்ராஸ் கானுக்கு முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.