
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் எட்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், இன்று சிட்னியில் நடந்த முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தும் பாகிஸ்தானும் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இரு அணிகளின் ஆடும் லெவன் காம்பினேஷனிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டிகளில் விளையாடிய அதே அணியுடன் தான் இந்த போட்டியில் களமிறங்கின.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் ஃபின் ஆலனை 4 ரன்னுக்கு முதல் ஓவரிலேயே வீழ்த்தினார் ஷாஹீன் அஃப்ரிடி. நன்றாக விளையாடி நல்ல தொடக்கத்தை பெற்ற டெவான் கான்வே, பவர்ப்ளேயின் கடைசி பந்தில் 21 ரன்களுக்கு ரன் அவுட்டாகி வெளியேற, க்ளென் ஃபிலிப்ஸ் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.