
பாகிஸ்தான் அணியானது சமீபத்தில் வங்கதேச அணியும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் மோசமான தோல்வியைத் தழுவிய பாகிஸ்தான் அணி, வரலாற்றில் முதல் முறையாக வங்கதேச அணியிடம் டெஸ்ட் தொடரை இழந்தது.
இதனையடுத்து பாகிஸ்தான் அணி அடுத்த மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி எதிர்வரும் அக்டோபர் மாதம் 7ஆம் தேதி தொடங்கும் இந்த டெஸ்ட் தொடரானது அக்டோபர் 28ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரின் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளும் முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், மூன்றாவது போட்டி மட்டும் ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி ஷான் மசூத் தலைமையிலான இந்த அணியில் 37 வயதான சுழற்பந்துவீச்சாளர் நோமன் அலிக்கு மீண்டும் டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது ரசிகர்களின் கவனத்தி ஈர்த்துள்ளது. ஏனெனில் பாகிஸ்தான் அணிக்காக நோமன் அலி கடைசியாக கடந்தாண்டு நடைபெற்ற இலங்கை டெஸ்ட் தொடரில் தான் விளையாடினார்.