
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தாண்டு ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இத்தொடருக்கான அனைத்து அணிகளும் மற்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர்களில் விளையாடி உலகக்கோப்பை தொடருக்காக தங்களைத் தயார்ப்படுத்தி வருகிறது.
அந்தவகையில், நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகாள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டி20 தொடரானது வரும் ஏப்ரல் 18ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடருக்கான மைக்கேல் பிரேஸ்வெல் தலைமையிலான நியூசிலாந்து டி20 அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து பாபர் ஆசாம் தலைமையில் இத்தொடரை எதிர்கொள்ளும் அணியும் அறிவிக்கப்பட்டது. இதில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு முடிவை திரும்பப்பெற்ற முகமது அமீர் மற்றும் இமாத் வசிம் ஆகியோருக்கும் இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது. அதேபோல் காயத்திலிருந்து மீண்ட நஷீம் ஷாவும் இத்தொடருக்கான பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.