
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று லாகூரில் நடைபெற்ற 12ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தாய்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஷவாலி ஸுல்ஃபிகுர் - முனீபா அலி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷவாலி 7 ரன்களுக்கும், முனிபா அலி 18 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய சித்ரா அமீன் ஒருபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுபக்கம் விளையாடிய அலியா ரியாஸ் 7 ரன்களுக்கும், சித்ரா நவாஸ் 11 ரன்களுக்கும் நடையைக் கட்டினார். பின்னர் சித்ரா அமீனுடன் இணைந்த கேப்டன் ஃபாத்திமா சனாவும் சிறப்பாக விளையாட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது.
தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் தங்களுடைய அரைசதங்களை பூர்த்தி செய்து அசத்தினர். அதன்பின் சிறப்பாக விளையாடி வந்த சித்ரா அமீன் 9 பவுண்டரிகளுடன் 80 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஃபாத்திமா சனா 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 62 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் பாகிஸ்தான் மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை மட்டுமே சேர்த்தது. தாய்லாந்து தரப்பில் திபாட்சா புத்தவோங் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.