
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தயாராகும் வகையில் பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இணைந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. மொத்தம் 4 போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதலிரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் மூன்றாவது போட்டியானது நேற்று (பிப்ரவரி 12) நடைபெற்றது. கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் பாகிஸ்தான் அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. ஆனால் இப்போட்டியில் பாகிஸ்தான் அணி வீரர்கள் தங்கள் ஆக்ரோஷமான செயல்பாடுகளின் காரணமாக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், தற்போது அதற்காக ஐசிசியின் நடவடிக்கைக்கும் உள்ளாகியுள்ளனர்.
அந்தவகையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின் போது ஐசிசியின் விதிமுறைகளை மீறியதாக பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த ஷாஹீன் அஃப்ரிடி, சௌத் ஷகீல் மற்றும் காம்ரன் குலாம் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி தென் அப்பிரிக்க அணி வீரர் மேத்யூ பிரீட்ஸ்கியிடம் மோதல் போக்கை கடைபிடித்ததன் காரணமாக போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதமாக பெற்றுள்ளார்.