
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது. இப்போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (அக்டோபர் 24) புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது டெஸ்ட் வீரர்களுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்தின் ஜோ ரூட் முதலிடத்தை தக்கவைத்துள்ளார். அவரைத்தொடர்ந்து நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில், இங்கிலாந்தின் ஹாரி புரூக் ஒரு இடம் பின் தங்கி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
மேற்கொண்டு இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் நான்காம் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 5ஆம் இடத்திலும் நீடிக்கும் நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ரிஷப் பந்த் 3 இடங்கள் முன்னேறி 6ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். மறுபக்கம் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஒரு இடம் பின் தங்கி 8ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மேலும் ரோஹித் சர்மா 2 இடங்கள் பின் தங்கி 15ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திர 36 இடங்கள் முன்னேறி 18ஆம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.