
பாகிஸ்தான் அணி தற்சமயம் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்திடம் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணியானது, நாளை இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது.
இதனையடுத்து பாகிஸ்தான் அணியானது அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது நவம்பர் 04ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நவம்பர் 14ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இதில் இங்கிலாந்து தொடரின் போது ஓய்வில் இருந்த பாட் கம்மின்ஸ் மீண்டும் அணியில் இணைந்துள்ளதுடன், கேப்டனாகவும் செயல்படவுள்ளார். அவருடன் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் உள்ளிட்ட நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களும் இந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.