
ஐசிசி 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இறுதிக்கட்டமாக தயாராகும் வகையில் வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது. அதில் 2023 ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணி நல்ல ஃபார்மில் இருக்கும் நிலையில் முதலிரண்டு போட்டிகளில் பணிச்சுமையை நிர்வகிப்பதற்காக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
அதனால் கேஎல் ராகுல் தலைமையில் முதலிரண்டு போட்டிகளில் விளையாடும் இந்திய அணியில் ஆஃப் ஸ்பின்னர் குறையை போக்குவதற்காக நீண்ட நாட்கள் கழித்து ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே விராட், ரோஹித் சர்மா ஆகியோர் இல்லாமலேயே கில், இஷான் கிஷன், பும்ரா போன்ற வீரர்களைக் கொண்டுள்ள இந்தியா இத்தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுத்து வெற்றி பெறுவதற்கு போராட தயாராகியுள்ளது.
குறிப்பாக சொந்த மண்ணில் வலுவான அணியாக கருதப்படும் இந்தியாவை கடந்த மார்ச் மாதம் அடித்து நொறுக்கிய ஆஸ்திரேலியா 3 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் படுதோல்வியை பரிசாக கொடுத்தது. எனவே இம்முறை சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு தக்க பதிலடி கொடுத்து அந்த பழைய கணக்கை இந்தியா தீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.