
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்கு முன்னதாக இத்தொடரின் முதலிரண்டு போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து அவருக்கான மாற்று வீரராக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராஜத் பட்டிதாருக்கு இந்திய அணியில் இடம்கிடைத்துள்ளது.
முன்னதாக கடந்த தென் ஆப்பிரிக்க தொடரின் போது ஒருநாள் அணிக்காக அறிமுகமான ராஜத் பட்டிதாருக்கு தற்போது இந்திய டெஸ்ட் அணியிலும் இடம் கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களிலும், இங்கிலாந்து லையன்ஸுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ராஜத் பட்டிதார் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் காரணமாக அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.