
இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறிய நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அந்த அணியில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. முன்னதாக, தேர்வுக்குழு தலைவராக இருந்த முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்ஜமாம் - உல் -ஹக் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு, பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த முன்னாள் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் மோர்னே மோர்கலும், பாகிஸ்தான் கேப்டனாக இருந்த பாபர் அசாமும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து, ஷான் மசூத் டெஸ்ட் அணிக்கு கேப்டனாகவும், ஷாஹீன் ஷா அஃப்ரிடியொ டி20 அணிக்கு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து, பாகிஸ்தான் அணியின் இயக்குனர் மற்றும் தலைமை பயிற்சியாளராக முகமது ஹபீஸ் மற்றும் புதிய தலைமை தேர்வாளராக வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், தற்போது பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்பை உமர் குல் மற்றும் சயீத் அஜ்மல் ஆகியோரிடம் பிசிபி ஒப்படைத்துள்ளது. அதன்படி, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அஜ்மலும், வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக உமர் குல்லும் செயல்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே டி20 தொடர் நடைபெறவுள்ளது. டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கும் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரில் இருந்து அஜ்மல் மற்றும் குல் பொறுப்பேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.