
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 7 வருடங்கள் கழித்து முதல் முறையாக இந்தியாவில் விளையாடி வரும் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் தங்களின் முதல் 5 போட்டிகளில் 3 தோல்விகளை பதிவு செய்து பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. இத்தனைக்கும் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளை தோற்கடித்த அந்த அணி முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றிகளுடன் நல்ல துவக்கத்தை பெற்றது.
ஆனால் இந்தியாவுக்கு எதிராக 191 ரன்களுக்கு சுருண்டு உலகக் கோப்பையில் தொடர்ந்து 8ஆவது முறையாக படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 163 ரன்கள் விளாசிய வார்னரின் கேட்ச்சை 10 ரன்களில் தவற விட்டு தோல்வியை சந்தித்தது. அதை விட சென்னையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பவுலிங், ஃபீல்டிங் துறையில் மொத்தமாக சொதப்பிய பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக அவமான தோல்வியை சந்தித்தது.
இந்த தோல்விகளுக்கு கேப்டனாக முன்னின்று டாப் ஆர்டரில் அதிரடியாக விளையாட வேண்டிய கேப்டன் பாபர் அசாம் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்துவதும் கேப்டன்ஷிப்பில் சுமாரான முடிவுகளை எடுப்பதுமே முக்கிய காரணமாக அமைந்து வருகிறது. அதனால் அவர் பதவி விலக வேண்டுமென்று சில முன்னாள் பாகிஸ்தான் வீரர்களும் ரசிகர்களும் போர்கொடி உயர்த்தியுள்ளனர்.