
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று கொழும்புவில் நடைபெற்ற இறுதிப்போட்டியுடன் முடிவுக்கு வந்தது. மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றன. அதன்படி இன்று நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து முதலில் விளையாடிய அந்த அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 15.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 50 ரன்களில் சுருண்டது. இந்திய அணி சார்பாக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.அதனை தொடர்ந்து 51 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 6.1 ஓவர்களின் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, “இன்று இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. இந்த தொடரின் இறுதி போட்டியில் இப்படி வந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது நமது அணியின் வீரர்களின் நல்ல மனநிலையை வெளிக்காட்டுகிறது. நாம் பந்துவீச்சில் சிறப்பாக தொடங்கி பேட்டிங்கில் சிறப்பாக முடித்திருக்கிறோம். நான் ஸ்லிப் பகுதியில் பீல்டிங் செய்து கொண்டிருக்கையில் நமது பந்துவீச்சாளர்கள் பந்து வீசுவதை பார்க்கவே பெருமையாக இருக்கிறது. இன்று நமது அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர்.