
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்த நிலையில், நேற்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது கார்டிஃபில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் இளம் அதிரடி வீரர் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் அரைசதம் கடந்து அசத்தியதுடன் 50 ரன்களையும், ஜோஷ் இங்கிலிஸ் 42 ரன்களையும், டிராவிஸ் ஹெட் 31 ரன்களையும் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணியானது 6 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்களைச் சேர்த்தது.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் பில் சால்ட் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். இதில் அவர் 39 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில் அடுத்து வந்த ஜேக்கப் பெத்தேலும் 44 ரன்களில் விக்கட்டை இழந்தார். ஆனாலும் இப்போட்டியில் 4ஆம் வரிசையில் விளையாடிய லியாம் லிவிங்ஸ்டோன் அதிரடியாக விளையாடியதுடன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து மிரட்டினார்.