
இந்தியா - இலங்கை அணிகள் மோதிய முதல் டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இன்றி நடந்தது. இதில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 162 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் பின்னர் ஆடிய இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 20 ஓவர்களில் 160 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
இந்த போட்டியில் டாஸின் போது பேசிய ஹர்திக் பாண்ட்யா, இந்த பிட்சில் பனியின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால், இரண்டாவதாக பந்துவீசவது கடினமாக இருக்கும். எனினும் நான் டாஸ் வென்றிருந்தாலும் 2ஆவது பவுலிங் செய்யும் வகையில் பேட்டிங்கை தான் தேர்வு செய்திருப்பேன். இனி வரும் இருதரப்பு போட்டிகளிலும் கடினமான முடிவுகளை தான் எடுக்கப்போவதாக கூறியுள்ளார்.
இதே போல போட்டி முடிந்த பிறகு அவர் பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், இந்திய அணி வீரர்களுக்கு இனி சிக்கலான சூழல்களை உருவாக்கி, அவர்களை அதில் இருந்து மீள அனுபவத்தை ஏற்படுத்திக்கொடுக்கவுள்ளதாக கூறினார். இதற்கேற்றார் போல தான் கடைசி ஓவரை ஸ்பின்னர் அக்ஷர் பட்டேலிடம் கொடுத்து ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்தினார்.