
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. ஆனாலும் இந்த உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்த சில வீரர்கள் மீது தொடரின் போதே பல்வேறு விமர்சனங்கள் எழத்தொடங்கியது, அவர்களை பிளேயிங் லெவனில் இருந்தும் நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
அந்தவகையில் இந்திய அணியில் ஆல் ரவுண்டராக இடம்பிடித்த ஷிவம் தூபே மீது தான் அவ்வாறான விமர்சங்கள் பெரும்பாலும் முன்வைக்கப்பட்டன. ஏனெனில் பேட்டிங்கில் சில போட்டிகளைத் தவிர்ந்து பெரும்பாலான போட்டிகளில் சோபிக்கத் தவறியது மற்றும் பந்துவீச்சிலும் அணிக்கு எந்தவொரு பங்களிப்பையும் வழங்காதது என அவர் மீது விமர்சங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனாலும் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைத்தது.
அதிலும் இறுதிப்போட்டியிலும் விளையாடிய ஷிவம் தூபே தடுமாற்றமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி ரசிகர்களை ஏமாற்றினார். நடந்துமுடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 8 போட்டிகளில் விளையாடிய அவர் 133 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் கிடைத்த அனுபவம் எனது திறனை மேம்படுத்த நம்பிக்கை வழங்கியதாக ஷிவம் தூபே தெரிவித்துள்ளார்.