அடுத்த சீசனிலும் இதனை செய்ய விரும்புகிறேன் - விராட் கோலி!
இந்த சீசனுக்கான ஆரஞ்சு தொப்பியைப் பெற்றதில் மிகவும் பெருமையடைகிறேன் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது ரசிகர்களுக்கு விருந்து படைத்த தொடராக இருந்துள்ளது. ஏனெனில் ஒவ்வொரு போட்டியிலும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வந்த இத்தொடரில் பல்வேறு சாதனைகள் குவிக்கப்பட்டுள்ளன. அதன்படி நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது மூன்றாவது முறையாக ஐபிஎல் தொடரில் சாதனை படைத்து அசத்தியது. அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரில் அதிக கோப்பையை வென்ற மூன்றாவது அணி எனும் பெருமையையும் தக்கவைத்துள்ளது. முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Trending
இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை அடித்த வீரருக்கான ஆரஞ்சு நிற தொப்பியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரும் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி கைப்பற்றியுள்ளார். இந்தாண்டு ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி, 5 அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் உள்பட 741 ரன்களை குவித்து, நடப்பு சீசனில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்ததுடன் ஆரஞ்சு தொப்பியையும் வென்று அசத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இந்த சீசனுக்கான ஆரஞ்சு தொப்பியைப் பெற்றதில் மிகவும் பெருமையடைகிறேன். சீசன் முழுவதும் எனது அணிக்காக நான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விதத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன், ஆனால் இதனைக் காட்டிலும் ஒவ்வொரு ஆட்டத்தில் நாங்கள் வெற்றிபெற வேண்டும் என்பதே மிக முக்கியமானதாகும். ஐபிஎல்லின் 2025 சீசனிலும் இதைப் பிரதிபலிக்க நான் விரும்புகிறேன். உங்கள் ஆதரவிற்கு அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now