எங்களின் ஆட்டத்தில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்துகிறோம் - ரோஹித் சர்மா!
நாளை எப்படிச் சிறப்பாக ஆட முடியும் என்பதில் மட்டுமே எங்களின் எண்ணம் இருக்கிறது. கடந்த கால வரலாறுகளைப் பற்றியெல்லாம் நாங்கள் யோசிக்கவே இல்லை என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்த இந்திய அணியும், 4வது இடம் பிடித்த நியூசிலாந்து அணியும் மோத உள்ளன.லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது.
அதேபோல் லீக் சுற்றில் இந்தியாவிடம் தோல்வி கண்ட நியூசிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி தொடர்ந்து 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது.கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வி கண்டு வெளியேறிய இந்திய அணி இந்த முறை அதற்கு பழிதீர்க்கும் முனைப்புடன் உள்ளது. இதனால் நாளை நடைபெறும் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, உலகக்கோப்பையின் முதல் போட்டியிலிருந்து கடைசி லீக் போட்டி வரைக்கும் எல்லா போட்டிகளும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது என தெரிவித்துள்ளார்.
Trending
இதுகுறித்து பேசிய அவர், "உலகக்கோப்பையின் முதல் போட்டியிலிருந்து கடைசி லீக் போட்டி வரைக்கும் எல்லா போட்டிகளும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது. எல்லா போட்டிகளுமே எங்களுக்கு அழுத்தமாகத்தான் இருந்தது. உலகக்கோப்பை என்றில்லை. இந்தியாவில் இருதரப்பு தொடரில் ஆடினாலும் அதிலும் வெல்ல வேண்டும் என்கிற அழுத்தம் இருக்கவே செய்யும். வெளியே இருக்கும் எல்லாருமே நாங்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பதையும் வெற்றி பெற வேண்டும் என்பதைத்தான் எதிர்பார்ப்பார்கள்.
இங்கே அத்தனை போட்டிகளுக்கும் அழுத்தம் இருக்கவே செய்கிறது. அழுத்தத்திற்கு இரையாகாமல் அதை சிறப்பாகக் கையாண்டதால் மட்டுமே 9 போட்டிகளைக் கடந்து நாங்கள் இங்கே வந்திருக்கிறோம். எங்களின் ஆட்டத்தில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்துகிறோம். நாளை எப்படிச் சிறப்பாக ஆட முடியும் என்பதில் மட்டுமே எங்களின் எண்ணம் இருக்கிறது. கடந்த கால வரலாறுகளைப் பற்றியெல்லாம் நாங்கள் யோசிக்கவே இல்லை. 1983இல் முதல் முறையாக உலகக்கோப்பையை வென்ற போது தற்போதைய அணியின் பல வீரர்கள் பிறந்திருக்கவே இல்லை.
2011இல் இந்திய அணி உலகக்கோப்பையை வென்ற போது இப்போதைய அணியின் வீரர்களில் பாதி பேர் கிரிக்கெட்டே ஆடத் தொடங்கவில்லை.இதுதான் எங்கள் அணியின் சிறப்பம்சம் என்று கூட நினைக்கிறேன். நாங்கள் இந்தத் தருணத்தில் இந்தப் போட்டியை எப்படி அணுகுவது என்பதில்தான் கவனத்தோடு இருக்கிறோம். 5 வருடத்திற்கு முன்பு என்ன நடந்தது, கடந்த உலகக்கோப்பையில் என்ன நடந்தது என்பதை பற்றியெல்லாம் விவாதிக்கவே மாட்டோம். அதேமாதிரிதான் நான் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறேன்.
இந்திய அணியில் சாதாரண வீரராகத் தொடங்கி ஒரு கேப்டனாக உயர்ந்தது வரைக்கும் என்னுடைய பயணம் எப்படி இருந்திருக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் நான் யோசிக்கவே இல்லை. நவம்பர் 19-ம் தேதிக்குப் பிறகு அதைப் பற்றியெல்லாம் யோசித்துக் கொள்கிறேன். இப்போதைக்கு இந்திய அணிக்காக எடுத்துக் கொண்ட பணியைச் சிறப்பாக செய்து முடிக்க வேண்டும். வெற்றியை தேடிக் கொடுக்க வேண்டும். அதுதான் ஒரே குறிக்கோள். நியூசிலாந்து அணி அவர்கள் கிரிக்கெட் ஆடும் விதத்திலும் ஆட்டத்தை அணுகும் முறையிலும் ரொம்பவே ஒழுக்கமானவர்கள்.
ஆட்டத்தில் என்ன செய்ய வேண்டும் என்கிற திட்டமிடல் அவர்களிடம் தெளிவாக இருக்கும். பல ஐசிசி தொடர்களாக சீராக அரையிறுதி வரைக்கும் முன்னேறியிருக்கிறார்கள். இந்தச் சீரான தன்மையில்தான் அவர்கள் இவ்வளவு தூரம் வந்திருக்கிறார்கள் என்பதை நாங்களும் அறிவோம். ஒவ்வொரு அணியின் பலம், பலவீனம் என்னவென்பதை நாங்கள் ஆராய்ந்து வைத்திருக்கிறோம். அதன்படி, திட்டங்களைத் தீட்டி களத்தில் செயல்படுவோம். மூன்று ஃபார்மேட்களிலும் இதுதான் உயர்ந்தது இதுதான் தாழ்ந்தது என எந்தக் கருத்தும் எனக்கில்லை.
ஆனாலும் ஓடிஐ உலகக்கோப்பைதான் எல்லாவற்றையும் விட மதிப்பு வாய்ந்தது என்பது என்னுடைய எண்ணம். போட்டி நடைபெறப்போகும் வான்கடே மைதானத்தில் சிறு வயதிலிருந்தே நிறைய கிரிக்கெட் ஆடியிருக்கிறேன். ஒரு நான்கைந்து போட்டியை வைத்துக் கொண்டு வான்கடே பிட்ச் இப்படியானதுதான் என எதையும் சொல்ல முடியாது. வான்கடே பிட்ச் பற்றி இப்போது அதிகம் பேசவும் விரும்பவில்லை. இந்த மைதானத்தில் டாஸ் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என நான் நினைக்கவில்லை" என கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now