
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி எதிர்வரும் ஜூன் 11ஆம் தேதி லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இதனையடுத்து தென் ஆப்பிரிக்க அணியானது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 28ஆம் தேதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூலை 06ஆம் தேதியும் நடைபெறவுள்ளது, இந்த நிலையில் ஜிம்பாப்வே டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
அதன்படி இந்த அணியின் கேப்டனாக டெம்பா பவுமா தொடரும் நிலையில், நட்சத்திர வீரர்கள் காகிசோ ரபாடா, ஐடன் மார்க்ரம், மார்கோ ஜான்சன், ரியான் ரிக்கெல்டன் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் உள்ளிட்டோரும் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் லுவான் ட்ரே பிரிட்டோரியஸ், லெசெகோ செனோக்வானே, கோடி யூசுஃப், டெவால்ட் பிரீவிஸ் மற்றும் ப்ரீனெலன் சுப்ரயன் உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கும் டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.