
இந்திய கிரிக்கெட்டில் சச்சின் மற்றும் சேவாக் ஓய்வு காலத்திற்குப் பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்த கலவையாக பிரித்வி ஷா இருப்பார் என்று பல முன்னாள் வீரர்களும் கணித்திருந்தார்கள். இதற்கு ஏற்றார் போல அவருடைய ஆரம்ப காலமும் இந்திய கிரிக்கெட்டில் மிக அமர்க்களமாக இருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் இந்திய மண்ணில் அறிமுகமான பிரித்வி ஷா, அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார்.
ஆனால் அதற்குப் பிறகு அவர் பேட்டிங் தொழில்நுட்பத்தில் இருந்த சில கோளாறு மற்றும் ஊக்க மருந்து பிரச்சனையில் அவருக்கு ஓராண்டு தடை என அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி விட்டது. இந்த நிலையில் அவருக்கு இந்த ஆண்டு ஐபிஎல் தொடரும் நன்றாக அமையவில்லை. எனவே அவர் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஒன்டே கப் தொடரில் கவுண்டி அணியான நார்த்தாம்டன்ஷைர் அணிக்கு விளையாட ஒப்பந்தமாகி விளையாடிக் கொண்டு வருகிறார்.
இன்று சோமர்செட் அணிக்கு எதிரான போட்டியில் நார்த்தாம்டன்ஷைர் அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்வது என தீர்மானித்தது. அணியின் இந்த முடிவை தனி ஒரு ஆளாக நின்று பேட்டிங்கில் நியாயப்படுத்தி இருக்கிறார் பிரித்வி ஷா. தொடக்க வீரராக களம் கண்ட பிரித்வி ஷா இந்தத் தொடரில் இங்கிலாந்தில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து அதிரடியில் சமரசம் செய்யாமல் முன்னேறிய அவர், சோமர்செட் பந்துவீச்சாளர்களை ஒரு முனையில் நின்று கொண்டு வதம் செய்தார்.