
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை முடிவடையும் வேளையில் அடுத்ததாக இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் தென்னாப்பிரிக்க அணி பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று பிசிசிஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதில் நடைபெற்று வரும் டி20 அணியில் விளையாடும் முதன்மை வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் ஷிகார் தவான் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட அணியே இந்தத் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
அதில் இளம் வீரர் முகேஷ் குமார், பெங்களூரு ராயல்ஸ் சேலன்ஞ்சர்ஸ் அணியை சேர்ந்த ராஜாத் பட்டிதார் போன்ற புதுமுக வீரர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணியில் ஏற்கனவே அறிமுகமாகி வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வரும் பிரிதிவி ஷா இந்த ஒரு நாள் தொடரில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.