
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் நேற்று நடைபெற்ற 3ஆவடு லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் மற்றும் முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கராச்சியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு கேப்டன் முகமது ரிஸ்வான் - ஷாய் ஹோப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரிஸ்வான் ஒருபக்கம் அதிரடியாக விளையாடிய நிலையில், மறுபக்கம் ஷாய் ஹோப் 8 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய உஸ்மான் கான் 16 ரன்களிலும், அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடிய காம்ரன் குலாம் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 36 ரன்களிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ரிஸ்வானுடன் இணைந்த மைக்கேல் பிரேஸ்வெல் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
இப்போட்டியில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய முகமது ரிஸ்வான் சதமடித்து மிரட்டினார். மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது ரிஸ்வான் 9 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 105 ரன்களையும், அவருடன் இணைந்த மைக்கேல் பிரேஸ்வெல் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 44 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் முல்தான் சுல்தான்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 234 ரன்களைச் சேர்த்தது. கராச்சி தரப்பில் ஹசன் அலி, குஷ்தீல் ஷா, அப்பாஸ் அஃப்ரிடி தலா ஒரு விக்கெடை வீழ்த்தினார்.