
இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது வெற்றிகரமாக 17 சீசன்களை கடந்து, 18ஆவது சீசனில் அடியெடுத்து வைக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலமானது நேற்றைய தினம் சௌதீ அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் நடைபெற்றது. இதில் மொத்தம் 574 வீரர்கள் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் எந்தெந்த வீரர்கள் எவ்வளவு தொகைக்கு ஏலம் செல்வார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்தன.
அந்தவகையில் நேற்று நடைபெற்ற வீரர்களுக்கான மெகா ஏலத்தில் அதிகபட்சமாக இந்திய அணியின் ரிஷப் பந்த் ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் ரூ.26.76 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியாலும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் எனும் சாதனைகளையும் படைத்தனர்.
இதுதவிர்த்து, யாரும் எதிா்பாராத வகையில் இந்திய வீரா் வெங்கடேஷ் ஐயா் ரூ.23.75 கோடிக்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டாா். முன்னதாக அவரை அணியிலிருந்து விடுவித்த கொல்கத்தா அணியே, தற்போது ஏலத்தில் போட்டி போட்டு அவரை மீண்டும் வாங்கியிருக்கிறது. மேலும் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.9.75 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. இந்நிலையில் இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் வாங்கிய வீர்ரகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.