பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாஅள் போட்டி இன்று ஃபைசலாபாத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் ஃபகர் ஸமான் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய பாபர் ஆசாம் 11 ரன்னிலும், முகமது ரிஸ்வான் 4 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த சைம் அயுப் - சல்மான் ஆகா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் தங்களின் அரைசதங்களையும் பதிவு செய்து அசத்தினர்.
அதன்பின் 53 ரன்களில் சைம் அயுப்பும், 69 ரன்களில் சல்மான் ஆகாவும் விக்கெட்டை இழந்தார். மேற்கொண்டு களமிறங்கிய வீரர்களில் முகமது நவாஸ் அபாரமாக விளையாடி அரைசதம் கடந்ததுடன் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களை விளாசி 59 ரன்களைச் சேர்த்தார். அவருடன் இணைந்த ஃபஹீம் அஷ்ரஃபும் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 28 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.