
இங்கிலாந்தில் நடந்து முடிந்த இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 பவுலராக இருக்கும் அஸ்வின் இந்திய அணியில் சேர்க்கப்படாதது தற்போது வரை விவாதமாகியே வருகிறது. சமீபத்தில் தன்னால் விளையாட முடியாமல் போனது வருத்தம் என்றாலும் அணி வெல்வதற்கு உதவியாக இருக்க வேண்டியது தான் முக்கியம் என்று அஸ்வின் பேசியிருந்தார்.
தற்பொழுது அவர் இன்னும் மனம் திறந்து தன்னுடைய எதிர்கால கிரிக்கெட் பற்றியும் கடந்த காலத்தில் நிகழ்ந்த மிக முக்கியமான சம்பவங்கள் பற்றியும் பேசி இருக்கிறார். இது குறித்து பேசிய அஸ்வின், “நான் வங்கதேச டெஸ்ட் தொடர் முடித்து திரும்பி வந்த பொழுது அடுத்து நடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரே என்னுடைய கடைசி கிரிக்கெட் தொடராக இருக்கலாம் என்று என் மனைவியிடம் கூறினேன்.
எனக்கு முழங்கால் பிரச்சனைகள் இருந்தது. என்னுடைய பவுலிங் ஆக்ஷனை மாற்ற போகிறேன் என்று சொன்னேன். ஏனென்றால் நான் பந்து வீசும் பொழுது முன் காலை லேண்டிங் செய்கையில் என் முழங்கால் சிறிதாக வளைந்தது. வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது முழங்கால் வலிக்க ஆரம்பித்து வீங்கியது. அப்படியானால் இதற்கு என்னதான் செய்வது சென்ற பொழுது நான் என்னுடைய பௌலிங் ஆக்க்ஷனை மாற்ற முடிவு செய்தேன்.