
ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று ஷார்ஜாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் ஸத்ரான் இணை தொடக்கம் கொடுத்தனர். ஆரம்பம் முதலே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர்.
இருவரும் இப்போட்டியில் அரைசதம் கடக்க, முதல் விக்கெட்டிற்கு 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதில் 4 பவுண்டரி 2 சிக்சர்கள் என 60 ரன்கள் சேர்த்த நிலையில் இப்ராஹிம் ஸத்ரான் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 19 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹ்மனுல்லா குர்பாஸ் சதமடித்து அசத்தினார்.
அதன்பின் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் 8 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 121 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரஹ்மத் ஷாவும் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதேசமயம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முகமது நபி 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 40 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.