
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக முடிந்த 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 3 – 0 என்ற கணக்கில் இந்தியா ஒயிட் வாஷ் செய்து வென்றது. குறிப்பாக பெங்களூருவில் நேற்று நடைபெற்ற 3ஆவது போட்டியில் பரபரப்பான இரட்டை சூப்பர் ஓவரில் ஆஃப்கானிஸ்தானை இந்தியா தோற்கடித்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோஹித் சர்மா 129, ரிங்கு சிங் 69 ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் 212 ரன்கள் எடுத்தது.
அதன் பின் விளையாடிய ஆஃப்கானிஸ்தானும் ரஹமனுல்லா குர்பாஸ் 50, இப்ராஹிம் ஸத்ரான் 50, குல்பதின் 55 எடுத்த உதவியுடன் 20 ஓவரில் சரியாக 212 ரன்கள் எடுத்தது. அதனால் சமனில் முடிந்த போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் இரு அணிகளும் மீண்டும் சரியாக 16 ரன்கள் எடுத்தது. அதற்காக மீண்டும் நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் இந்தியா நிர்ணயித்த 12 ரன்கள் துரத்திய ஆஃப்கானிஸ்தான் 1 மட்டுமே எடுத்தது.
இதனால் 2ஆவது சூப்பர் ஓவரில் 10 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்று கோப்பையை கைப்பற்றியது. முன்னதாக இந்த போட்டியில் முதல் சூப்பர் ஓவரை எதிர்கொண்ட ஆஃப்கானிஸ்தானுக்கு முகேஷ் குமார் வீசிய கடைசி பந்து முகமது நபியின் காலில் பட்டு சென்றது. அதை பயன்படுத்திய முகமது நபி 3 பைஸ் ரன்களை ஓடி எடுத்ததால் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா கோபமடைந்தார்.