முடிவுக்கு வருகிறதா ராகுல் டிராவிட்டின் பயிற்சியாளர் பயணம்?
இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கேப்டனாக விராட் கோலி மற்றும் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இருவரும் மிகப்பெரிய சாதனைகளை படைத்திருக்கிறார்கள். இந்தக் கூட்டணிக்கு இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனி இடம் இருக்கிறது. கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இருவரது பொறுப்பின் கீழான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, உலகத்தில் எந்த நாட்டிலும் டெஸ்ட் தொடரை கைப்பற்றக்கூடிய அளவில் இருந்தது.
மேலும் இவர்களுடைய காலத்தில்தான் இந்திய வேகம் பந்துவீச்சுத் துறை எந்த அளவிலும் இல்லாத அளவுக்கு முன்னேறி மேலே வந்தது. உலகில் எந்த நாட்டு பேட்ஸ்மேன்களையும் அவர்களுடைய நாட்டிலேயே அச்சுறுத்தும் வகையில் இந்திய வேகப்பந்து வீச்சுத் துறை வளர்ந்தது. இந்நிலையில் கேப்டனாக விராட் கோலியும் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியும் பொறுப்பில் இருந்து நகர, புதிய கேப்டனாக ரோஹித் சர்மாவும் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டும் பொறுப்புக்கு வந்தார்கள்.
Trending
ஆனால் எதிர்பார்த்தபடி ராகுல் டிராவிட்டின் பயிற்சி காலம் இந்திய கிரிக்கெட்டுக்கு அமையவில்லை. இவர் பொறுப்பேற்ற முதல் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் மிகப்பெரிய தோல்வியாக அமைந்தது. அதற்கு அடுத்து இங்கிலாந்து, 2022 ஆசிய கோப்பை, டி20 உலகக் கோப்பை, வங்கதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டி என்று தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் முடிந்ததும் பயிற்சியாளர் பொறுப்பில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் பெரிய மாற்றங்களை கொண்டு வர இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதன்படி ராகுல் டிராவிட்டிற்கு பதிலாக இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ஆஷிஸ் நெக்ரா தேர்வுசெய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றால் ராகுல் டிராவிட் மேற்கொண்டு பயிற்சியாளர் பொறுப்பை தொடர விரும்பவில்லை என்றும், அதே சமயத்தில் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வெல்லவில்லை என்றால், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு மட்டும் அவரை பயிற்சியாளராக வைப்பதற்கான யோசனைகள் செல்வதாகவும், அதேபோல் ஒவ்வொரு கிரிக்கெட் வடிவத்திற்கும் ஒவ்வொரு பயிற்சியாளர்களை கொண்டுவரஇருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதுகுறித்து பிசிசி அதிகாரி ஒருவர் தெரிவித்த கருத்தில் “இந்தியா உலகக் கோப்பையை வெல்கிறது என்று வைத்துக்கொள்வோம், ராகுல் டிராவிட் தனது பயிற்சியாளர் காலத்தை மிக உச்சத்தில் முடிக்க விரும்புவதால், மேற்கொண்டு அவர் பயிற்சியாளர் பொறுப்பை விரும்பவில்லை. என்னை கேட்டால் பிசிசிஐ உலகக் கோப்பை முடிந்ததும், ஒவ்வொரு கிரிக்கெட் வடிவத்திற்கும் தனித்தனி பயிற்சியாளர்கள் குறித்து யோசிக்க வேண்டும். மேலும் டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு ராகுல் டிராவிட்டையே பயிற்சியாளராக மீண்டும் கொண்டுவர யோசிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now