
கர்நாடகா கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் மகாராஜா கோப்பை எனும் டி20 தொடர் நடத்தப்படு வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் பெங்களூரு பிளாஸ்டர்ஸ் - மைசூர் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் தொடங்கும் முன் மழை நீடித்ததன் காரணமாக இப்போட்டியானது 18 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய மைசூர் வாரியர்ஸ் அணியானது ஹர்ஷில் தரமணி மற்றும் மனோஜ் பாண்டே ஆகியோரது அரைசதத்தின் மூலம் 18 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக மனோஜ் பாண்டே 58 ரன்களையும், ஹர்ஷில் தரமணி 50 ரன்களையும் சேர்த்தனர். பெங்களூரு அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய நவீன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடி பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணியானது புவன் ராஜு, சுரர் அவுஜா ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 17.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் மைசூர் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகனாக புவன் ராஜு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.