
இங்கிலாந்து அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. டெஸ்ட் தொடருக்கு ஆயத்தமாகும் வகையில் இரண்டு நாட்கள் மற்றும் நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டங்களை இந்தியா ஏ அணியும், இங்கிலாந்து லயன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இதில் முதல் போட்டி டிராவில் முடிந்ததை அடுத்து இரண்டாவது பயிற்சிப் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
அஹ்மதாபாத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி இங்கிலாந்து லயன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜென்னிங்ஸ் மற்றும் அலெக்ஸ் லீஸ் ஆகியோர் களமிறங்கினர். தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 157 ரன்கள் குவித்தது. அலெக்ஸ் லீஸ் சிறப்பாக விளையாடி அரை சதம் கடந்து 73 ரன்களில் ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ஜென்னிங்ஸ் மிகச் சிறப்பாக விளையாடி சதம் விளாசினார்.
அதன்பின் 158 பந்துகளில் 20 பவுண்டரி, இரண்டு சிக்ஸருடன் 154 ரன்கள் எடுத்த நிலையில் ஜென்னிங்ஸ் ஆட்டம் இழந்தார். ஒன்டவுனில் களமிறங்கிய கேப்டன் போகனன் அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அதில் 182 பந்துகளில் 14 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 125 ரன்கள் விளாசி போகனனும் ஆட்டம் இழந்தார். அதற்குப் பின்னர் களம் இறங்கிய மவுஸ்லி அரை சதம் விளாசி ஆட்டம் இழந்தார். அதற்குப் பிறகு களம் இறங்கிய டெய்லென்டர் மேத்யூ பார்ட்ஸ் 44 ரன்கள் விளாச, கார்சன் அதிரடியாக விளையாடி 35 பந்துகளில் 5 பவுண்டரி, இரண்டு சிக்ஸர் உடன் 53 ரன்கள் விளாசினார்.