
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2024-25 சீசன் இறுதிக்கட்டதை எட்டியுள்ளது. இதில் நேற்று தொடங்கிய இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் விதர்பா மற்றும் தமிழ்நாடு அணிகள் பலப்பரீட்சை நடத்தின.நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீரர் அதர்வா டைடே ரன்கள் ஏதுமின்றியும், ஆதித்யா தாக்ரே 5 ரன்களுக்கும், துருவ் ஷோரேவும் 26 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் விதர்பா அணி 44 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த டேனிஷ் மாலேவார் மற்றும் கருண் நாயர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்ததுடன், 4ஆவது விக்கெட்டிற்கு 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.
பின்னர் இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டேனிஷ் மாலேவார் 75 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய யாஷ் ரத்தோட் 13 ரன்களுக்கும், கேப்டன் அக்ஷய் வாத்கரும் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கருண் நாயர் சதமடித்து அசத்தினார். இதன்மூலம் விதர்பா அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ரன்களைச் சேர்த்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை கருண் நாயர் 100 ரன்களுடனும், ஹர்ஷ் தூபே 19 ரன்களுடனும் தொடர்ந்தனர்.