
ரஞ்சி கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் காலிறுதிச்சுற்றின் முடிவில் மும்பை, தமிழ்நாடு, மத்திய பிரதேசம் மற்றும் விதர்பா அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறின. இதில் இன்று தொடங்கிய இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் சாய் சுதர்ஷன் ரன்கள் ஏதுமின்றியும், ஜெகதீசன் 4 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய பிரதோஷ் பால், கேப்டன் சாய் கிஷோர், நட்சத்திர வீரர் பாபா இந்திரஜித் ஆகியோர் அடுத்தடுத்தி சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் தமிழ்நாடு அணி 42 ரன்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் இணைந்த விஜய் சங்கர் - வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் இருவரும் அரைசதம் அடிப்பாகள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய் சங்கர் 44 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 43 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டானர். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.