
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2024-25 சீசன் இறுதிக்கட்டதை எட்டியுள்ளது. இதில் நேற்று தொடங்கிய இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் விதர்பா மற்றும் தமிழ்நாடு அணிகள் பலப்பரீட்சை நடத்தின.நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கருண் நாயர் தனது சதத்தை பதிவுசெய்து அசத்தியதுடன், 18 பவுண்டரி ஒரு சிக்ஸர் என 122 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அவருடன் இணைந்து விளையாடிய டேனிஷ் மாலேவார் 75 ரன்களையும், ஹர்ஷ் தூபே 69 ரன்களையும் சேர்த்து அணியை சரிலிருந்து மீட்டனர். இதன்மூலம், விதர்பா அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 353 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தமிழ்நாடு அணி தரப்பில் சோனு யாதவ், விஜய் சங்கர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தமிழ்நாடு அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் முகமது அலி 4 ரன்களிலும், சாய் சுதர்ஷன் 7 ரன்னிலும், பூபதி குமார் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஜெகதீசனும் 22 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த விஜய் சங்கர் மற்றும் ஆண்ட்ரே சித்தார்த் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 5ஆவது விக்கெட்டிற்கு 95 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். பின் 22 ரன்களில் விஜய் சங்கர் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து விளையாடி வந்த ஆண்ட்ரே சித்தார்த் 10 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 65 ரன்களில் ஆட்டமிழந்தார்.