
இந்தியாவின் புகழ்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்று ரஞ்சி கோப்பை தொடர். இத்தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதில் எலைட் சீ பிரிவில் இடம்பிடித்துள்ள பெங்கால் மற்றும் மத்திய பிரதேச அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதற்கு காரணம் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி.
கடந்தாண்டு இந்தியாவில் நடந்து முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது ஷமி, அத்தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்தடுத்த தொடர்களை தவறவிட்டார். பின்னர் தனது காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர், ஐபிஎல் மற்றும் டி20 உலகக்கோப்பை போன்ற முக்கிய தொடர்களில் இருந்து விலகியது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் தள்ளியது. இதனால் அவர் எப்போது மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என்ற கேள்வியும் எழுந்தது.
பின்னர் வங்கதேச தொடர், நியூசிலாந்து தொடர் என தவறவிட்ட முகமது ஷமி அடுத்ததாக நடைபெற இருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பிடிக்காமல் தவறவிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்திருந்த நிலையில் தான், மத்திய பிரதேச அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் முகமது ஷமி களமிறங்கினார்.