
எஸ்ஏ20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் குவாலிஃபயர் சுற்று ஆட்டத்தில் ரஷித் கான் தலைமையிலான எம்ஐ கேப்டவுன் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் டேவிட் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இந்நிலையில் இப்போட்டியின் மூலம் ஆஃப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அந்தவையில் இப்போட்டியில் ரஷித் கான் 2 விக்கெட்டுகளை கைப்பறியதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் டுவைன் பிராவோவின் சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார். முன்னதாக வெஸ்ட் இண்டீஸுன் முன்னாள் ஜாம்பவான் டுவை பிராவோ 582 போட்டிகளில் விளையாடி 631 விக்கெட்டுகளை கைப்பற்றியதே சாதனையாக இருந்த நிலையில், ரஷித் கான் 461 போட்டிகளில் 633 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான ரஷித் கான் உலகின் அனைத்து முக்கிய டி20 லீக்குகளிலும் விளையாடி வருகிறார். மேலும் அவர் ஐபிஎல் மற்றும் பிஎஸ்எல் தொடர்களில் சமபியன் பட்டத்தை வென்ற அணிகளிலும் அங்கம் வகித்துள்ளதுடன், பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார். மேற்கொண்டு எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு முன் குஜராத் டைட்டன்ஸ் அணியானது ரூ.15 கோடிக்கு ரஷித் கானை தக்கவைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.