
கடந்தாண்டு தொடக்கத்தில் ஆஃப்கானிஸ்தான் நாட்டில் பெண்களுக்கு எதிராக தலிபான் அரசு செயல்பட்டு வருவதாக, அங்கு பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி மற்றும் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆஃப்கான்ஸ்தான் அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா அணி விளையாட இருந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து விலகிக் கொள்வதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது.
ஆனால் ஆஸ்திரேலிய அணியின் இம்முடிவுக்கு ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததுடன், இம்முடிவை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மாற்றாவிட்டால் தானும் பிக் பேஷ் லீக் தொடரில் விளையாடுவது குறித்து ஆலோசிக்க வேண்டி இருக்கும் என்று தனது எச்சரிக்கையையும் கொடுத்திருந்தார். ஆனாலும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா, ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரை ஒத்திவைப்பதாக அறிவித்தது.
இதனையடுத்து கடந்தாண்டு நடைபெற்ற பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இருந்து ரஷித் கான் விலகினார். இதனால் கிரிக்கெட் ஆஸ்திரேலியா மற்றும் ரஷித் கான் இடையிலான விரிசலானது அதிகமானது. இதன் எதிரொலியாக இவ்விரு அணிகளும் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் மற்றும் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர்களில் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்திய போட்டிகள் அனைத்து ரசிகர்கள் மத்தியில் தனி கவனத்தைப் பெற்றது.