
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று நடைபெற்றது. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டன் ஷுப்மன் கில் 2 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த சாய் சுதர்ஷன் - ஜோஸ் பட்லர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சாய் சுதர்ஷன் அரைசதம் கடந்து அசத்தினார். அதேசமயம் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜோஸ் பட்லர் 36 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷாரூக் கானும் 36 ரன்களில் ஆட்டமிழக்க, அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்ஷன் 82 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இறுதியில் ராகுல் திவேத்தியா 24 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுக்க, குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து கடின இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடி வருகிறது.