
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களுக்காக நடத்தப்பட்டு வரும் உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணியில் பில் மஸ்டர்ட் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த இயான் பெல் மற்றும் ரவி போபரா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரு தங்களின் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன் இரண்டாவது விக்கெட்டிற்கு 131 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின்னர் 54 ரன்களைச் சேர்த்த கையோடு பெல் விக்கெட்டை இழந்தார்.
மேற்கொண்டு களமிறங்கிய மொயீன் அலியும் தனது பங்கிற்கு ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 33 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தனர். அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த போபரா தனது சதத்தைப் பதிவுசெய்ததுடன், 8 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 110 ரன்களைச் சேர்த்தார். இதன் மூலம் இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 223 ரன்களைக் குவித்தது.