
டி20, ஒருநாள் அணிகளின் கேப்டன்சியை தொடர்ந்து டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்தும் விராட் கோலி விலகினார். ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு, திடீரென டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலகினார் விராட் கோலி.
டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் ரோஹித் சர்மாவே நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இருந்தாலும் யாரை டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து கூறிவருகின்றனர். எதிர்காலத்தை கருத்தில்கொண்டு ரிஷப் பந்த், கேஎல் ராகுல் ஆகியோர் பெயர்களை கேப்டன்சிக்கு பரிந்துரைக்கின்றனர் சில முன்னாள் வீரர்கள்.
பேட்ஸ்மேனைத்தான் கேப்டனாக நியமிக்க வேண்டுமா? ஏன் ஃபாஸ்ட் பவுலரை கேப்டனாக நியமிக்கக்கூடாதா? கபில் தேவ் ஃபாஸ்ட் பவுலர் தான். அவர் சிறந்த கேப்டனாக திகழவில்லையா? பாகிஸ்தானில் வாசிம் அக்ரம், இம்ரான் கான், வக்கார் யூனிஸ் ஆகியோர் கேப்டனாக இருந்திருக்கின்றனர். ஃபாஸ்ட் பவுலர்களை கேப்டனாக பரிசீலிப்பதில்லை. இந்த டிரெண்ட் மாறவேண்டும். ஃபாஸ்ட் பவுலர்கள் எப்போதுமே வெற்றிக்காகத்தான் ஆடுவார்கள். எனவே பும்ராவை துணை கேப்டனாக நியமித்து, அவரை அடுத்த கேப்டனாக இந்திய அணி உருவாக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஷோயப் அக்தர் கருத்து கூறியிருந்தார்.