நம்பர் ஒன் இடத்தில் ஜடேஜாவை பார்ப்பதில் மகிழ்ச்சி - ரவி சாஸ்திரி!
ரவீந்திர ஜடேஜா உலக ஆல்ரவுண்டர்கள் வரிசையில் நம்பர் 1 வீரராக இருப்பதற்கு மகிழ்ச்சியை தெரிவித்திருக்கும் ரவி சாஸ்திரி, ஜடேஜா எங்கிருந்து அதற்கான உழைப்பை விதைத்தார் என்பது பற்றிய உரையாடலை பகிர்ந்துள்ளார்.
இந்திய அணியானது தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ள வேளையில் இந்திய அணியானது இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது நாளை மறுநாள் மார்ச் 1ஆம் தேதி இந்தூரில் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலுமே பேட்டிங் மற்றும் பவுலிங் என சிறப்பாக செயல்பட்ட ஜடேஜா ஆட்டநாயகன் விருதினை வென்றதோடு சேர்த்து ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் ஆல்ரவுண்டர் பட்டியலில் நம்பர் 1 ஆல்ரவுண்டராகவும் தொடர்ந்து ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஏற்பட்ட காயம் காரணமாக பல்வேறு முக்கிய தொடர்களை தவறவிட்ட ஜடேஜா அதன் பிறகு தற்போது மீண்டும் கம்பேக் கொடுத்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அனைவரது மத்தியிலும் வரவேற்பினை பெற்றுள்ளது.
Trending
இந்நிலையில் இப்படி ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் நம்பர் 1 ஆல் ரவுண்டராக மாறுவதற்கு எப்படி எல்லாம் உழைத்தார் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “ஜடேஜா தன்னுடைய விளையாட்டில் அதிக பசியுடன் இருக்கிறார். விளையாட்டிற்கு உண்மையாகவே இருக்கக்கூடிய ஒருவர் அவர். அதனால் அவர் உலகின் நம்பர் ஒன் ஆல்ரவுண்டராக இருக்கும் நிலைக்கு தகுதியானவர் என்று நான் நினைக்கிறேன் என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் : ஜடேஜாவுடன் நான் நிறைய முறை பேசி உள்ளேன். அதில் பல உரையாடல்கள் எனக்கு நியாபகம் இல்லை.
ஆனால் ஒரு முக்கியமான உரையாடல் மட்டும் என்னால் எப்பொழுதுமே மறக்க முடியாது. அந்த வகையில் 2019-ஆம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது லார்ட்ஸ் நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஜடேஜா அணியில் இடம் பெறவில்லை. அப்போது நான் ஜடேஜாவிடம் சென்று பேசினேன். என்னுடன் பந்துவீச்சு பயிற்சியாளரான பரத் அருணும் உடன் இருந்தார்.
அந்த சமயத்தில் நான் ஜடேஜாவிடம், உங்களுக்கு அனைத்து திறமையும் இருக்கிறது. நீங்கள் பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்துங்கள். வலைப்பயிற்சியில் பேட்டிங்கில் கூடுதலாக உழைத்தால் நிச்சயம் உங்களால் பெரிய இடத்தை தொட முடியும். அதற்கான திறமை உங்களுக்கு இருப்பது நீங்கள் அறிய வேண்டும் என்று கூறினேன். பின்னர் ஜடேஜா தனது பேட்டிங்கில் கடினமாக உழைக்க ஆரம்பித்தார்.
கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் எங்கு சென்றாலும் கடினமான ஆடுகளங்களில் கூட அவர் பேட்டிங்கில் பயிற்சி எடுத்து ரன்களை எடுத்துக் காட்டினார். மிகச் சிறப்பாக பயிற்சியை மேற்கொண்ட அவர் வெளிநாட்டு சூழ்நிலைகளிலும் சரி, இந்தியாவிலும் சரி மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். அவரது கடினமான உழைப்பே இன்று அவரை உலகின் நம்பர் ஒன் வீரராக மாற்றியுள்ளது” என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now